திருப்பூர்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம் சூலூரில் சரக்குகளை அனுப்பி வைக்கும் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த 22-ந் தேதி இந்த நிறுவனத்தில் வேலை செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர், அலுவலகத்தில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3 செல்போன்களை திருடிவிட்டு தப்பினார்கள்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அங்குள்ள போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுகுறித்து அந்த நிறுவனத்தின் திருப்பூர் கிளை மேலாளரான தீபக் பாபு, திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமனிடம் புகார் தெரிவித்தார். அதில் சூலூர் அலுவலகத்தில் இருந்து செல்போன்களை திருடிய வாலிபர்களின் புகைப்படங்களையும் கொடுத்தார்.
அந்த புகைப்படங்களை வைத்து திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், கோவையில் இருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்தது. அந்த ரெயிலில் ஒரு பெட்டியில், போலீசார் தேடிய 3 பேர் இருந்தனர்.
அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மேற்கு வங்க மாநிலம் பரகனா மாவட்டத்தை சேர்ந்த மொபசால்(வயது 23), அக்பர் ஷேக்(24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும், சூலூரில் உள்ள சரக்குகளை ஏற்றி செல்லும் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் அவர்கள் வேலை செய்து வந்ததும், அங்கிருந்து 3 செல்போன்களை அவர்கள் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 3 பேரையும் திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த தகவலை சூலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் கைது செய்த 3 பேரையும் திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்றுகாலை சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.