நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் முத்து ராமச்சந்திரன் (வயது 36). பெயிண்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், மேலப்பாளையம் அமுதா பீட் நகரை சேர்ந்த மாரிச்செல்வி (28) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரிச்செல்வி கணவரை விட்டு பிரிந்து அமுதா பீட் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் மாரிச்செல்வியின் தங்கை ரேவதியுடன் முத்துராமச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியை, முத்துராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். இது ரேவதி குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்காளை விலக்கி வைத்துவிட்டு தங்கையை திருமணம் செய்ததால், முத்துராமச்சந்திரன் மீது அவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
ரேவதியுடன் முத்துராமச்சந்திரன் மேலப்பாளையம் சிவராஜபுரம் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 10 மணியளவில் அவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
சிறிது தூரம் சென்றபோது, ரேவதியின் தம்பி வள்ளிமணிகண்டன் கையில் அரிவாளுடன் அவரை வழிமறித்து நிறுத்தினார். அவரை பார்த்ததும் முத்துராமச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.
ஆனால், வள்ளிமணிகண்டன் ரோட்டில் ஓட, ஓட விரட்டிச்சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பலத்த வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த அவர் தட்டுத்தடுமாறி மீண்டும் எழுந்து ஓட முயன்றார். ஆனால், அவரை மீண்டும் வள்ளிமணிகண்டன் சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் தலை, கழுத்து, கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டதால் முத்துராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே வள்ளிமணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இந்த பயங்கர கொலை குறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங், பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பிணமாக கிடந்த முத்து ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வள்ளி மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் தொழிலாளி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.