திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் முழுவதும் திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலை ஆகிய 6 தாலுகா கோர்ட்டுகளில் நேற்று 15 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருப்பூரில் 2 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதை திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அலமேலு நடராஜன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.
முதன்மை சார்பு நீதிபதி முரளதரன் முன்னிலை வகித்தார். மேலும் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஜமுனா, முகமது ஜியாபுதீன், மகளிர் கோர்ட்டு நீதிபதி ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன ரம்யா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் கவியரசன், பழனி, நித்யகலா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன், குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 110 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் வங்கி வராக்கடன் தொடர்பாக 31 வழக்குகள், மாநகராட்சி தொடர்பான 27 வழக்குகள், 969 சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பாக 537 வழக்குகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 286 வழக்குகளுக்கு ரூ.31 கோடியே 90 லட்சத்து 27 ஆயிரத்து 686 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், அந்தந்த தாலுகா வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதேபோன்று ஐகோர்ட்டு மதுரை கிளை, பிற மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்களில் பணியில் இருக்கும் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 531 அமர்வுகள் வழக்குகளை விசாரித்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 598 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டன.
இதன்மூலம் வங்கி கடன் வசூல், விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு என மொத்தம் 368 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு ஏற்பட்டது.