பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பினாமி சொத்துகள்
நான் 500 ஏக்கர் நிலம் வைத்திருப்பதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் லட்சுமண் கூறியுள்ளார். இதற்கு சட்டமே பதில் அளிக்கும். எனது பொது வாழ்க்கையில் இத்தகைய புகார்கள் வருவது புதிது ஒன்றுமில்லை. அவரை போன்ற விளம்பர பிரியர்கள், ஊடகங்கள் முன் தோன்றி வெடிக்காத பட்டாசை வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்த பொய் புகாருக்காக
மன்னிப்பு கோராவிட்டால் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடுப்பேன்.
என்னிடம் 500 ஏக்கர் நிலம் இருப்பதற்கு ஏதாவது ஆதாரங்களை வழங்கினால் அதில் பாதி நிலத்தை தானமாக கொடுத்து விடுகிறேன். அந்த லட்சுமண், ஊடகங்கள் முன் பேசும்போது சத்திய ஹரிச்சந்திரனை போல் பேசுகிறார். அவர் தனது கட்சி தலைவர்களின் பினாமி சொத்துகள் குறித்து பேசுவதற்கு பதிலாக என் பெயரை கூறியது போல் உள்ளது.
அரசியல் வாழ்க்கை
எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் ஊழல் செய்து சிறைக்கு சென்று வந்துள்ளனர். ஆனால் என் மீது சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறியது சரியா?. எனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை 4 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன். மந்திரி பதவியை நிர்வகித்துள்ளேன். தேர்தலில் போட்டியிட்டபோது எனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளேன். எனக்கு எதிராக சிலர் லோக்அயுக்தாவிலும் புகார் கூறினர். ஆனால் அந்த புகார்களில் உண்மை இல்லை என்று நிராகரிக்கப்பட்டன.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.