மாவட்ட செய்திகள்

“கொரோனாவை தடுக்க அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம்” - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

கொரோனா தொற்றை தடுக்க அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 650 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான 50 லட்சம் முக கவசங்கள் வழங்கும் பணியினை சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னையை அடுத்த கண்ணகி நகரில் நேற்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு 195, சுனாமி நகர், கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஒவ்வொருவருக்கும் மறுபயன்பாட்டுடன் கூடிய 6 முக கவசங்கள் மற்றும் கைகழுவும் திரவம் வழங்கப்பட்டன.

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைவரும் கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் எனவும், ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் எனவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆய்வு

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு குழு அலுவலரும், நகராட்சி நிர்வாக ஆணையாளருமான கா.பாஸ்கரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) ஜெ.யு.சந்திரகலா, தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் ராயபுரம் மண்டலங்களுக்கு சென்று அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கோடம்பாக்கம் மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் எஸ்.வினீத், ராயபுரம் மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் கே.நந்தகுமார் மற்றும் மண்டல அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேற்கூறிய தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்