திண்டுக்கல்,
மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சி, சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணம் என்பதால் திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அத்துடன் தற்போது அனைத்து ரெயில்களிலும் செல்போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த நிலையில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் செல்போன்கள், உடைமைகள் அடிக்கடி திருடு போவதாக திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் போலீசார் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய முதியவர் ஒருவர் சந்தேகப்படும்படி கையில் பையுடன் சுற்றித்திரிந்தார். இதைப்பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முருகன் (வயது 60) என்பதும், பயணிகளிடம் இருந்து 7 செல்போன்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் கூறுகையில், பயணிகள் செல்போன்களை சார்ஜ் செய்வதற்காக தங்கள் இருக்கை அருகே வைக்கின்றனர். இதனை நோட்டமிடும் திருடர்கள், அவர்கள் அசந்த நேரத்தில் அந்த செல்போன்களையும், அவர்களின் உடைமைகளையும் திருடிச்செல்கின்றனர். எனவே ரெயிலில் பயணம் செய்பவர்கள் அனைவரும் தங்கள் செல்போன்கள், உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.