நாகர்கோவில்,
திற்பரப்பு பகுதியில் பாதை தகராறில் ஒருவர் மீது ஆசிட் வீசி கண்பார்வை இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஆசிட் வீச்சு
திற்பரப்பு அருகே உள்ள தூரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவருக்கும் அதே பகுதிய சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான மணி என்பவருக்கும் பாதை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஸ்ரீகண்டனின் முகத்தில் மணி ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீகண்டனுக்கு 2 கண்ணிலும் பார்வை இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், மணிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.