மோட்டார் சைக்கிள் மோதியது
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமம், கண்டிகை தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மனைவி வனஜா (வயது 65). இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இதே தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் வனஜா மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த வனஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாகன ஓட்டியை தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவர்தனன் (38). கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோவர்தனன் தனது மோட்டார் சைக்கிளில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தாமரைபாக்கம் சிவன் கோவில் அருகே உள்ள வேகத்தடையின் மீது சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். தகவல் அறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கோவர்தனன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.