ராதாபுரம்,
ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கொளுத்தும் வெயிலில் வீடு, வீடாக, வீதி, வீதியாக சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வேட்பாளர் இன்பதுரை நேற்று வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளான குளத்து குடியிருப்பு, சமத்துவபுரம், ஹவுசிங் போர்டு, விசுவாசபுரம், நம்பியாவிளை, காமராஜ் நகர் மற்றும் வள்ளியூர் வடக்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவரைகுளம், சிவஞானபுரம், அம்பலவாணபுரம், சவுந்திரலிங்கபுரம், வடக்கன்குளம், தெற்கு பெருங்குடி, வடக்கு பெருங்குடி, பெருங்காளியாபுரம், லெப்பை குடியிருப்பு, பெரியநாயகிபுரம், காவல்கிணறு, காவல்கிணறு சந்திப்பு, சங்கனாபுரம், தெற்கு கருங்குளம் ஆகிய கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். நம்பர் தொகுதி அப்போது, அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் 2000 மினி கிளினிக்குகளால் மக்கள் அதிகம் பயன் பெற்று வருகின்றனர். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட உள்ளது. ரேஷன் பொருட்கள் வருங்காலங்களில் வீடு தேடி வரும். இந்த திட்டங்களை எண்ணிப்பார்த்து மக்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும்.
ராதாபுரம் தொகுதியில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராதாபுரம் தொகுதி நம்பர் ஒன் தொகுதியாக விளங்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், செல்வராஜ், நகர செயலாளர் பொன்னரசு, பொதுக்குழு உறுப்பினர் செழியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், நிர்வாகிகள் எட்வர்டுசிங், சந்திரமோகன், தங்கராஜ், விவேக், தீபக், காவை பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.