மும்பை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார் கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்தின் அலுவலகம் மும்பை வில்லேபார்லேயில் உள்ளது. இந்த அலுவலகத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத் தியும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் நாம்தமிழர் கட்சியை சேர்ந்த கனகமணிகண்டன், பொன் இனவாழவன், சிவன், நாடோடி, அந்தோணி மற்றும் மலாடு, பாண்டுப், தாராவி, அந்தேரி, பன்வெல், கோலிவாடா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான நாம்தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.