மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

வேலூர்,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், பருவமழை பொய்த்ததாலும் அணைகள், ஏரிகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. 600 அடிவரை ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாற்றில் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டதால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துவருகிறது.

தண்ணீரின் அளவு குறைந்ததோடு, 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் வாரத்துக்கு ஒரு முறை மட்டும்தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

சில கிராமங்களில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறுகளில் நள்ளிரவு நேரங்களிலும் காத்திருக்கிறார்கள். பலர் விலைகொடுத்து தண்ணீர் வாங்குகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை காரணமாக தினமும் ஏதாவது ஒரு பகுதியில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் குடிநீர் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளுக்கு தினமும் காலை 7 மணிக்கே சென்று அந்தப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தண்ணீர் பிரச்சினைக்கான காரணம் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று அனுமதியின்றி இருக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள், மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சும் வீடுகளில் குழாய் இணைப்புகளை துண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், வெளியூர்களுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய்களில் இருந்து யாராவது சட்ட விரோதமாக இணைப்பு பெற்றுள்ளார்களா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்