திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் 2 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மெய்யபுரம் ஊருக்குள் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல பொதுமக்கள் முயன்றனர். ஆனால் விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்லக்கூடாது என போலீசார் இரும்பு தடுப்புகள் போட்டு தடுத்து நிறுத்தினர். இதற்கு எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது போலீசாரை கண்டித்து, மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.