மாவட்ட செய்திகள்

தண்ணீர் லாரி கவிழ்ந்து மாணவர் பலி: பொதுமக்கள் மறியல் போராட்டம்

மணலியில் சாலையோர பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து பள்ளி மாணவன் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

மணலி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகன் சியாம்(வயது 13). இவர், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை சியாம், பள்ளி முடிந்து மணலி சாலையில் இருந்து பெரியார் நகரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியில் லிப்ட் கேட்டு அதில் ஏறிச்சென்றார்.

அப்போது எதிரே வந்த டிரைலர் லாரிக்கு வழிவிட தண்ணீர் லாரியை அதன் டிரைவர் குபேந்திரன்(45) சாலையோரமாக ஓட்டியபோது, எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. டிரைவர் குபேந்திரன், லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினார். ஆனால் தண்ணீர் லாரிக்கு அடியில் சிக்கிய மாணவன் சியாம், பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பலியான மாணவர் சியாமின் உறவினர்கள் ஒன்று திரண்டு அப்பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன் தலைமையில் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் விரைந்துவந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும்போது, பெரியார் நகர் செல்லும் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அங்குள்ள தனியார் ரசாயன தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குண்டும் குழியுமான அந்த சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும். விபத்தில் பலியான சிறுவன் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கவேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள், கிராம தலைவர்கள் தொழிற்சாலைக்குள் சென்று தொழிற்சாலை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தனியார் தொழிற்சாலை மூலம் சாலை சீரமைத்து கொடுக்கப்படும். பலியான மாணவன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்