ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது. 172 பயணிகளும், 7 விமான ஊழியர்களும் அதில் சென்றனர். விமானம் நடுவானில் பறந்து சென்றபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதை கண்ட விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்பதால் சென்னையில் அவசரமாக தரை இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னையில் தரை இறங்க அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்துக்கு பிறகு துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் விமானத்தில் பயணம் செய்த 179 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணிகள் வேறு விமானத்தில் துபாய் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.