கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் தேவேந்திரன் மகன் வரதராஜ் (வயது 17), குமார் மகன் ராஜ்குமார் (16) மற்றும் ராமு மகன் அஸ்வந்த் (15). நண்பர்களான இவர்களில் வரதராஜ், ராஜ்குமார் ஆகியோர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். அஸ்வந்த் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 4-ந்தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் அருகே கோமுகி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை வழியாக நடந்து சென்றபோது நீர் வரத்து திடீரென அதிகரித்ததால் தவறி விழுந்த 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் வரதராஜ், ராஜ்குமாரை ஆகியோரை பேரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வரதராஜ் பரிதாபமாக இறந்தான். ராஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
சாலை மறியல்
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் அஸ்வந்த்தை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். தொடர்ந்து நேற்று 3-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அஸ்வந்த்தை விரைவாக கண்டுபிடித்து தரக்கோரி அவனது உறவினர்கள் நேற்று காலை கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அஸ்வந்த்தை விரைவாக தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மாணவின் உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் கள்ளக்குறிச்சியிருந்து சேலம் மற்றும் சென்னைக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.