வால்பாறை
வால்பாறையில் படகு இல்லம் திறப்பது எப்போது என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
படகு இல்லம்
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் வாழைத்தோட்டம் புதிய பஸ் நிலையம் பகுதிக்கு அருகில் சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில் படகு இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த படகு இல்லம் சோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. படகு இல்லத்தில் இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. ஆனால் அந்த பணிகள் எதுவும் இதுவரை செய்யவில்லை.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இந்த நிலையில் தற்போது வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறது. அவர்கள் இங்குள்ள சுற்றுலா மையங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள். ஆனால் சிலர் படகு இல்லம் இருப்பதை அறிந்து அங்கு செல்லும்போது, அது திறக்கப்படாமல் இருப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே யாருக்கும் பயன்படாத வகையில் இருக்கும் இந்த படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
திறக்க வேண்டும்
வால்பாறை படகு இல்லத்தில் எவ்வித பராமரிப்பு பணியும் இல்லாததால் அங்கு குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அத்துடன் சுற்றுலா பயணிகள் சவாரி செய்யும் படகுகளும் வீணாக கிடக்கிறது.
இந்த படகு இல்லத்தை பராமரித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்தால், அதிகம் பேர் இங்கு வருவார்கள். அதை செய்ய யாரும் முன்வருவது இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பயன்படாமல் இருக்கும் படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.