மாவட்ட செய்திகள்

நிதி நிறுவன அதிபரை கொன்று புதைத்தது ஏன்? 2-வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்காதலனை ஏவி நிதி நிறுவன அதிபரை கொன்று புதைத்தது ஏன்? என்பது குறித்து அவரது 2-வது மனைவியான பெண் என்ஜினீயர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

தர்மபுரி,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் கவியரசு (வயது 42). நிதி நிறுவன அதிபர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த இவர் தர்மபுரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வட்டி தொழில் மூலம் அறிமுகமான என்ஜினீயர் நிர்மலா(23) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கவியரசு திடீரென மாயமானார்.

இளம்பிள்ளைக்கு அடிக்கடி வந்து செல்லும் தனது மகன் வராததால் சந்தேகமடைந்த கவியரசுவின் தாயார் கடந்த 14-ந்தேதி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் கவியரசுவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த செல்போன் நிர்மலா வசம் இருப்பதும், அதில் அபினேஷ் என்ற வாலிபர் தொடர்ந்து பேசி வருவதையும் போலீசார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது நிர்மலாவின் தூண்டுதலின்பேரில் அவருடைய காதலனான அபினேஷ் மற்றும் சிலர் சேர்ந்து கவியரசை கொன்று குண்டல்பட்டி அருகே புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து கவியரசுவின் பிணத்தை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அபினேஷ், நிர்மலாவின் கல்லூரி பருவ காதலர் என்பதும், ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றிய அவர் தற்போது கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

கவியரசுவை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்ட நிர்மலா, திருமணத்திற்கு பின் கவியரசுவின் பாலியல் தொல்லையால் பாதிப்புக்குள்ளாகி அவரை கொலைசெய்யும் முடிவை எடுத்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நிர்மலா, அவருடைய முன்னாள் காதலரான அபினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து கவியரசுவின் 2-வது மனைவி நிர்மலாவிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது நிர்மலா அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது:-

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நிர்மலாவின் தாயார் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வந்தார். அப்போது அங்கு உணவு சாப்பிட வந்த கவியரசு, நிர்மலாவின் குடும்பத்தினருக்கு அறிமுகமானார். அவரிடம் ஓட்டல் செலவுகளுக்காக நிர்மலாவின் தாயார் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்பை முடித்த நிர்மலா ஓட்டலில் அவ்வப்போது வேலை செய்துள்ளார். அவரை பார்த்த கவியரசு திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்.

கவியரசுவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த நிர்மலா தான் ஏற்கனவே அபினேஷ் என்ற வாலிபரை 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறி உள்ளார். ஆனால் நிர்மலாவை திருமணம் செய்தே தீருவது என முடிவெடுத்த கவியரசு, நிர்மலாவின் குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்று உள்ளார். இதுபற்றி அறிந்த அபினேஷ் தான் காதலிக்கும் நிர்மலாவை திருமணம் செய்ய வேண்டாம் என்று கவியரசுவை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். அப்போது அபினேசை கவியரசு தாக்கியுள்ளார்.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நிர்மலாவை கட்டாயப்படுத்தி 2-வது திருமணம் செய்து கொண்ட கவியரசு, அவருக்கு பாலியல் தொல்லையை கொடுத்து உள்ளார். இதனால் ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த நிர்மலா இதுபற்றி கள்ளக்காதலனான அபினேசிடம் கூறி உள்ளார். இதுதொடர்பாக அபினேஷ் மீண்டும் கவியரசுவை சந்தித்து தட்டிக்கேட்டபோது அவரை நண்பர்களுடன் சேர்ந்து கவியரசு தாக்கியுள்ளார். அபினேசிடம் இதுபற்றி ஏன் கூறினாய் என்று நிர்மலாவையும் சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதனால் கணவரை கொலை செய்ய முடிவெடுத்த நிர்மலா, அபினேசிடம் இதுதொடர்பாக பேசி உள்ளார். முதலில் மறுத்த அபினேஷ், நிர்மலாவின் வற்புறுத்தலால் கவியரசுவை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக ரூ.1 லட்சம் தருவதாக கூறிய நிர்மலா முதல்கட்டமாக ரூ.52 ஆயிரத்தை அபினேசிடம் தந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 14-ந்தேதி இரவு அடியாட்களுடன் கவியரசுவின் நிதிநிறுவன அலுவலகத்திற்கு சென்ற அபினேஷ் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார். அப்போது அபினேஷ் மற்றும் அடியாட்கள் தாக்கியதில் படுகாயமடைந்த கவியரசுவை குண்டல்பட்டி அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் ஏற்கனவே வெட்டிவைக்கப்பட்டிருந்த குழிக்குள் தள்ளி அவருடைய தலையில் கல்லை போட்டு கொலை செய்து உள்ளனர்.

பின்னர் குழியை மண்ணால் மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே நிர்மலாவுடன் செல்போனில் பேசுவதை அபினேஷ் தவிர்த்து உள்ளார். இவ்வாறு நிர்மலாவின் வாக்குமூலம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலர் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு