அதிராம்பட்டினம்:
ஏரிப்புறக்கரை ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி வழியாக ஏரிப்புறக்கரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
மேலும் அதிராம்பட்டினத்தில் இருந்து ஏரிப்புறக்கரை செல்வோரும், ஏரிப்புறக்கரை கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடித்துவிட்டு திரும்பும் மீனவர்களும், அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
இருசக்கர வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் செல்ல முடியாத அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிப்புறக்கரை ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.