சென்னை,
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 தினங்களாக காய்கறி விலை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு கிலோ பல்லாரி(பெரிய வெங்காயம்) ரூ.10 முதல் ரூ.14 வரையிலும், ஒரு கிலோ தக்காளி, கேரட், பீட்ரூட் தலா ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயத்தை (சிறிய வெங்காயம்) தவிர, மற்ற அனைத்து காய்கறி விலையும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் டன் அளவுக்கு காய்கறி விற்பனைக்கு வருகிறது. ஆனால் தற்போதைய தேவை நமக்கு 3 ஆயிரம் டன் தான் என்றும், இந்த அளவிலேயே மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாகத்தான் இருக்கிறது என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், காய்கறி அளவுக்கு அதிகமாக கடைகளில் சேர்ந்து இருப்பதால், விலையை குறைத்து இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகிறோம். இனி வரக்கூடிய நாட்களிலும் இதே நிலை தான் நீடிக்கும் என்றனர்.
நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
தக்காளி- ரூ.8 முதல் ரூ.10 வரை, பெரிய வெங்காயம்(பல்லாரி)- ரூ.10 முதல் ரூ.14 வரை, உருளைக்கிழங்கு- ரூ.24, சாம்பார் வெங்காயம்- ரூ.60 முதல் ரூ.70 வரை, கேரட்- ரூ.8 முதல் ரூ.10 வரை, பீன்ஸ்- ரூ.25 முதல் ரூ.30 வரை, பீட்ரூட்- ரூ.10 முதல் ரூ.12 வரை, சவ்சவ்- ரூ.20, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20 வரை, முட்டைக்கோஸ்- ரூ.7, வெண்டைக்காய்- ரூ.25, கத்தரிக்காய்- ரூ.12, பாகற்காய்- ரூ.15, புடலங்காய்- ரூ.7, கோவைக்காய்- ரூ.13, முருங்கைக்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, சேனைக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20 வரை, சேப்பக்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.45 வரை, மிளகாய்- ரூ.20, இஞ்சி- ரூ.55 முதல் ரூ.60 வரை, அவரைக்காய்- ரூ.30 முதல் ரூ.35 வரை, நூக்கல்- ரூ.15, கொத்தவரைக்காய்- ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகின்றன.