புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, நிவாரண தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 253 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகை உரியம்பட்டியை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர் கொடுத்த மனுவில், நாங்கள் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் மற்றும் நபார்டு வங்கியிலும் கடன் பெற்று உள்ளோம். இந்நிலையில் கஜா புயலால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள், விவசாய பயிர்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. இதனால் நாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நாங்கள் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் மற்றும் நபார்டு வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.