3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக நாடு முழுவதும் உள்ள 1 கோடி வீடுகள் மற்றும் கோவில்களில் ராமச்சந்திர மூர்த்தி, சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்த இந்து தர்ம ரக்சன சமிதி ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி முதலாவது பூஜை, சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கீழ் செயல்படும் வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வெங்கடேசபெருமாள், தாயார் சிலைகளுக்கு முன்பு உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி தலைமையில் பூஜைகள் நடந்தது. அவற்றுடன் 16 நதிகளின் புண்ணிய தீர்த்தங்கள், புனித மண் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
பின்னர் உற்சவர் சிலைகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. சிறப்பு பூஜையில் சமிதி செயலாளர் ஹரிஹரன், கமிட்டி உறுப்பினர்கள் பி.வி.ஆர்.கிருஷ்ணாராவ், கார்த்திகேயன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 1 கோடி வீடு, கோவில்களில் பூஜை முடிந்ததும் இந்த உற்சவர் சிலைகள் அயோத்தி ராமர் கோவிலில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.