புதுடெல்லி
சென்ற நிதி ஆண்டில் (2018-19), அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா 3-வது இடம்
சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. அதே சமயம் உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது.
நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களுமாக 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. சென்ற 2018-19 நிதி ஆண்டில் இந்நிறுவனம் 61 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் 60.7 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்து இருந்தது. எனினும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது உற்பத்தி 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகம், நடப்பு நிதி ஆண்டில் (2019-20), கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கை 66 கோடி டன்னாக நிர்ணயித்து இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டு இலக்கை விட இது 5 கோடி டன் அதிகமாகும்.
இந்நிலையில், கடந்த நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மொத்தம் 48 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் அதிகமாகும். அப்போது சப்ளை 45 கோடி டன்னாக இருந்தது.
மார்ச் மாதத்தில் மட்டும் மின் நிலையங்களுக்கு இந்நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 4.61 கோடி டன்னாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 4.27 கோடி டன்னாக இருந்தது.
சென்ற நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 23.36 கோடி டன்னாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 9 சதவீதம் அதிகமாகும். இதில், கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி (4.72 கோடி டன்னில் இருந்து) 4.77 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது.
பிரதான எரிபொருள்
அனல்மின் நிலையங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.