மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவை கலெக்டர் வினய் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கொரோனாவிற்கு சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பிரிவில் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சுகாதாரத் துறையின் உத்தரவின்படி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு பிரிவை பார்வையிட்டேன். சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் தேவையான அனைத்து வசதிகளோடு அந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.
நேற்று அனுமதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மதுரையில் ஜி.எஸ்.டி. கலால் மற்றும் சுங்க வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் இத்தாலி நாட்டிற்கு சென்று வந்ததால் தானாக முன்வந்து கொரோனா சிறப்பு பிரிவில் சேர்ந்து கொண்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் குறித்த பரிசோதனை விவரங்கள் தேனி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா ஆய்வு செய்வதற்காக வசதிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அது நிறைவு பெற்று விரைவில் மதுரையிலேயே கொரோனா குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த இரட்டையர்களான கல்லூரி மாணவர்கள் இருமல், காய்ச்சலுடன் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பொது வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, அவர்கள் வெளிநாட்டிற்கு எங்கும் செல்லவில்லை, ஆனாலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சுங்கவரித்துறை அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தேனியில் இருந்து மருத்துவ அறிக்கை வந்துள்ளது. இதனை நேற்று மாலை ஆஸ்பத்திரி டீன் சங்குமணி தெரிவித்தார்.