நாமக்கல்,
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி குமாரபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராசிபுரம் கொங்கு மண்டப நிர்வாகத்தில் தவறு இருக்கிறது என அக்கட்சியினர் சிலர் என்னிடம் கூறி உள்ளனர். அரசியலுக்கு வந்தால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதை விடுத்து என்னுடன் வருகிற 7-ந் தேதி விவாதத்திற்கு தயாரா? என ஈஸ்வரன் அழைக்கிறார்.
எதிராக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை சமாதானப்படுத்துவதை விட்டு, அமைதியை சீர்குலைக்கும் வகையில் விவாதத்திற்கு தயாரா? என்று என்னை அழைக்கின்றார். விவாதத்திற்கு நான் தயார். எனக்கும் உங்களுக்கும் பகலில் ஓட்டு சேகரிக்கும் பணி இருக்கிறது. உங்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் வேண்டாம். எங்கள் கட்சியினரும் வேண்டாம். பொது இடத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விவாதம் நடத்த தயார்.
அ.தி.மு.க.வை பா.ஜனதாவிடம் அடகு வைத்துவிட்டதாக அவர் சொல்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று கூறுகிறார். உண்மையில் நீங்கள் தான் உங்கள் கட்சியை தி.மு.க.விடம் அடகு வைத்து விட்டீர்கள். எதற்காக நீங்கள் கட்சி தொடங்கினீர்கள். முதலில் சிலிண்டர், அடுத்து தொப்பி சின்னத்தில் போட்டியிட்டீர்கள். இப்போது தி.மு.க. சின்னமான உதயசூரியனில் நிற்கிறீர்கள்.
எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி என்கிறோம். அவர்கள் யாரை சொல்வார்கள். கடந்த 1998, 2004-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். கால சூழ்நிலைக்கு ஏற்ப நிலைபாடுகள் எடுப்பது இயற்கை தான். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வெற்றி பெறுவார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கோ, அவரது மகன்களுக்கோ தொடர்பு இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணைத்தலைவர் பழனிசாமியே கூறி உள்ளார். அப்படி இருக்கையில் ஈஸ்வரன், பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் விவகாரத்தில், பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் தெரிவிக்கிறார்.
கொங்கு மண்டபத்தில் முறைகேடு இல்லை என நிரூபிப்பது அவரது கடமை. அதேபோல் மின்சார வாரியத்தில் முறைகேடு என குற்றம் சாட்டப்பட்டால் நிரூபிக்க நாங்கள் தயார். தோல்வி பயத்தில் கோபத்தில் என்மீது ஈஸ்வரன் சவால் விடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஈரோடு நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறன், குமாரபாளையம் நகர செயலாளர் நாகராஜ், முன்னாள் நகர செயலாளர் எம்.எஸ்.குமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் நாமக்கல் நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் டி.எல்.எஸ். காளியப்பன் நேற்று வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரனூர், நெம்பர்.3 குமாரபாளையம், அண்ணாமலைபட்டி, மின்னக்கல், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
அவர்களுடன் பி.ஆர்.சுந்தரம் எம்.பி., வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் தாமோதரன், வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் செல்வம், அத்தனூர் செயலாளர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.