கீரனூர்,
பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மாட்டுத்தாவணி எனப்படும் மாட்டுச்சந்தை நடைபெறும். அந்த வகையில் நேற்று தொப்பம்பட்டியில் மாட்டுச்சந்தை தொடங்கியது. 5 நாட்கள் நடக்கும் இந்த சந்தையில் பழனி, ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், பொள்ளாச்சி, உடுமலை, தொப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகள், காளைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
சந்தையில், ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தப்படும் காளைகள், கறவை பசுக்கள், உழவு மாடுகள், காங்கேயம், புலிக்குளம் உள்ளிட்ட நாட்டின மாடுகள், காளைகளும் விற்பனைக்காக கொண்டுவரப்படும். அவற்றை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.
நேற்று முதல் நாள் என்பதால் சந்தைக்கு மாடுகளும், வியாபாரிகளும் அதிகளவில் வரவில்லை. இதுகுறித்து தொப்பம்பட்டியை சேர்ந்த வெற்றி கொண்டான் என்பவரிடம் கேட்டபோது, பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயம் பெருமளவில் நடைபெறவில்லை. அதோடு தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு தேவையான தீவனங்களை விளைவிக்க முடியவில்லை. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் இந்த சந்தையில் முதல்நாளே மாடுகள் வரத்து அதிகமிருக்கும். அப்போது மாட்டுக்கு தேவையான கழுத்துக்கயிறு, மணிகள் அடங்கிய சாட்டைகள், விவசாய கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு சந்தையின் முதல் நாளான இன்று (அதாவது நேற்று) மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. அதேபோல் விற்பனையும் மந்தமாக இருந்தது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மாடுகளின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.