கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாசில்தார் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று மாலை கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுத்து செல்லும் வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினார்கள்.
அந்த வாகனத்தில் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் இருந்தது, இது தொடர்பாக அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் தாசில்தார் சிவா விசாரணை நடத்திய போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும், துப்பாக்கி ஏந்திய காவல்காரர் பணியில் இல்லாததும், ரிசர்வ் வங்கி வகுத்திருந்த விதிமுறைகள் பின்பற்றாமல் ஏ.டி.எம். மையத்துக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
வருமானவரித்துறை விசாரணை
இதனால் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாயை தாசில்தார் சிவா கைப்பற்றி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்,
விசாரணையில் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் இருந்து 2 கோடியே 72 லட்சம் ரூபாய் எடுத்து வந்து ஏ.டி.எம். எந்திரங்களில் வைத்தது மற்றும் இருப்பில் உள்ள தொகை போக, 40 லட்சம் ரூபாய்க்கு கணக்கு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் வங்கி அதிகாரிகளையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்கள், ஆனால் அவர்களால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால், பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார்.
மேலும் ரூ.97 லட்சம் பறிமுதல்
இதேப்போல் கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் நாராயணன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த ஏ.டி.எம். வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையிட்ட போது, ரூ.97 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த வாகனத்தில் வந்த தனியார் ஏஜென்சி ஊழியரிடம் விசாரித்த போது, அவர்கள், அந்த பணத்தை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். எந்திரங்களில் வைப்பதற்காக புதுச்சேரி சென்றதாகவும், ஆனால் பணத்தை ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்காமல் திரும்ப கொண்டு செல்வதாகவும் கூறினார்கள்.
அந்த பணத்தை ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்காமல் திரும்பக்கொண்டு வந்தது ஏன்? என்ற கேள்விக்கு தனியார் ஏஜென்சி ஊழியரால் பதில் அளிக்க முடியவில்லை, மேலும் அவரிடம் அடையாள அட்டையும் இல்லை, அதோடு அந்த வாகனத்தில் வர வேண்டிய தனியார் ஏஜென்சியின் மற்றொரு ஊழியரும் மாயமாகியிருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படையினர், வாகனத்துடன் பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருமானவரித்துறையினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வங்கி அதிகாரிகளையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாததால் பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார்.
ஏ.டி.எம். வாகனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது? இதற்கு தனியார் ஏஜென்சியினரும், வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இதுதவிர பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் புதுக்கடையில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபாயையும், அபிஷேகபாக்கத்தில் 4 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயையும், புருசோத்தமன் தலைமையிலான பறக்கும் படையினர் பச்சையாங்குப்பத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாயையும், தாசில்தார் கீதா தலைமையிலான பறக்கும் படையினர் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயையும், அருள்தாஸ் தலைமையிலான பறக்கும் படையினர் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.