திருச்செந்தூர்,
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது.
காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் அனைத்து சன்னதிகளிலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டன.
சொக்கப்பனை எரிப்பு
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் கடற்கரையில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.