மேட்டுப்பாளையம்,
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் காரமடை ஆசிரியர் காலனி அருகே நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு திரண்டிருக்கும் எழுச்சி மக்களின் ஆரவாரத்தை பார்க்கும் போது, நாற்பதுக்கு நாற்பது வெற்றி கிடைத்துவிடும் என்று தெரிகிறது. நான் கடந்த 20-ந் தேதி திருவாரூரில் ஏற்பட்ட எழுச்சிபோன்று இங்கும் மக்களின் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. மத்தியில் ஆட்சியை மாற்றும் நிலையிலும், மாநிலத்தில் ஆட்சியை உருவாக்கும் நிலையிலும் இங்கு நீங்கள் ஆர்வத்துடன் திரண்டு உள்ளர்கள். இங்கு திரண்டிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது, மாநில அளவிலான மாநாடா அல்லது வெள்ளி விழா மாநாடா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நம் கையில் மாநில ஆட்சி, நாம் கைகாட்டுபவர்கள் மத்தியில் ஆட்சி என்ற நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது. அதற்கு நீங்கள் மிகப்பெரிய வெற்றியை தரவேண்டும். அதற்காக தி.மு.க. வேட்பாளராக ஆ.ராசா உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீங்கள் மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும். நாங்கள் தேர்தல் நேரத்தில் உங்களை நாடி வருபவர்கள் அல்ல. உங்கள் சுக, துக்கங்களில் உங்கள் தேவைகளுக்கு கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்கள். கருணா நிதி இப்போது இல்லை. அவர் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எனவே ஒவ்வொரு வேட்பாளரையும் கருணாநிதியாக நினைத்து, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க அவரது மகன் ஸ்டாலின் உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன். தவறான ஆட்சி தற்போது அமர்ந்துள்ளது. எனவே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உங்கள் வேட்பாளர் ஆ.ராசா கருணாநிதியிடம் நல்ல மதிப்பை பெற்றவர். எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் போன்றவர். அவருக்கு மற்றொரு சகோதரனாக நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். 1952-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் தேர்தல் நடைபெற்றது. அதில் தி.மு.க. போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணா பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு தி.மு.க. போட்டியிட்டது. இதில் குளித்தலை தொகுதியில் கருணாநிதி வெற்றி பெற்றார். அன்று முதல் 2016-ம் ஆண்டுவரை தேர்தலில் தோல்வியை சந்திக்காத ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே.
எனவே வருகிற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் கருணா நிதி தான் வேட்பாளர், உதய சூரியன் தான் உங்கள் சின்னம் என்பதை மனதில் கொண்டு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆ.ராசாவை பற்றி தொகுதி மக்கள் அனைவரும் நன்கு அறிந்தவர்கள். அவர் மத்தியில் தொலை தொடர்புத்துறை மந்திரியாக திறன்பட செயல்பட்டதால் பல எதிரிகளை சம்பாதித்தார். அதனால் அவர் மீது வீண்பழி சுமத்தி சிக்க வைத்தனர். பின்னர் கருணாநிதி சொன்ன உடனே அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அந்த வழக்கை வாய்தா கேட்காமல் வாதாடினார். முடிவில் தன்மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபித்தார்.
மத்தியில் பாசிச ஆட்சி, மாநிலத்தில் எடுபிடி ஆட்சி நடைபெறுகிறது. மோடி ஒரு சர்வாதிகாரி, எடப்பாடி ஒரு உதவாக்கரை. நான் 10 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன். கோடநாடு சம்பவம் குறித்து தொடர்ந்து பேசுவேன். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை தொடர்ந்து பேசுவேன். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குறித்த ஆதாரங்களை கணினியில் பதிவு செய்து அங்கு வைத்திருந்தார். மேலும் அங்கு ரூ.2 ஆயிரம்கோடி இருந்தது. அதை எடுப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மூலம் கேரளாவை சேர்ந்த ஷயன் உள்பட 11 அடியாட்களை அனுப்பி, காவலாளியை கொன்று உள்ளே இருந்த ஆவணங்களை எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ, கூலிப்படையினரில் ஒருவரான ஷயன் வெளியே கூறியதால் தான் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
அதேபோன்று ஷயனை கொலை செய்ய முயன்றனர். இதில் அவரது மனைவியும், மகளும் பரிதாபமாக இறந்தனர். இதில் ஷயன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கோடநாட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பாளர் என்ஜினீயர் தினேஷ் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார். கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்தார். இந்த மூன்று சம்பவங்களும் ஒரு மணி நேரத்தில் நடக்கிறது. இறந்துபோன கனகராஜின் சகோதரன் தனபால் இது விபத்து அல்ல. இதில் மர்மம் உள்ளது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்று வெளிப்படையாக கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு முதல்- அமைச்சர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.
கோடநாடு சம்பவம் குறித்து பேச தடை இல்லை என்று கோர்ட்டு கூறிவிட்டது. இதுவரை நான் கோடநாடு சம்பவத்தில் பாதிதான் பேசினேன். இனி எதையும் மறைக்காமல் முழுவதையும் பேசுவேன். தி.மு.க. ஆட்சி வந்ததும் கோடநாடு சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி தொடர்புடையவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்போம். அதற்கு முன் நீங்கள் தண்டிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு வருகிற 18-ந்தேதி கிடைத்துள்ளது. அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
பொள்ளாச்சி சம்பவம் வெட்கக்கேடானது. பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து உள்ளனர். இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பு இருக்கிறது. 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது.அதைபோன்று மற்றொரு துயரமான சம்பவம் துடியலூர் சம்பவம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ஜெயலலிதாவை தான் மக்கள் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தனர். ஆனால் அந்த முதல்-அமைச்சரின் மரணமே மர்மமாக இருக்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருந்த போது உடல் நலகுறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச் சை தெளிவாக தினந்தோறும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஒவ்வொரு நாளும் ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்பி வந்தனர்.
திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விண்ணப்பத்தில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகை, அவர் சுயநினைவு இன்றி இருக்கும் போது பதிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா இறந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து வந்து அவரது காலில் விழுந்தார். இதைதான் நான் மண்புழுபோல் வந்தார் என்று சொன்னேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி மண்புழு என்றால் விவசாயிகளின் நண்பன் என்று சொல்கிறார். அவர் மண்புழு அல்ல விஷ புழு. அவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தவம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா சாவில் மர்ம இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்துள்ளார். அதற்கு மோடி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல் -அமைச்சர் பதவி வழங் கப்பட்டதும் அவர் அமைதியாகி விட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா இறந்ததற் கான உரிய காரணத்தை கண்டுபிடிப்போம். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு என்ன அக்கறை என்று கேட்கிறார்கள். அவர் தமிழக முதல் - அமைச்சர் நான் எதிர்கட்சி தலைவர். எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை முன்வைத்து ஓட்டு கேட்கிறோம். ஆனால் முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் எங்களை குறை சொல்லிதான் பொதுமக்களிடம் ஓட்டு கேட்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆராக நினைத்து நிறைய இடத்தில் பேசி வருகிறார். ஆனால் அவர் செல்லும் இடத்தில் கூட்டமே இல்லை. ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் ஒரு நல்ல திட்டம். இதை அவர் தெரிவித்தபோது அவருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினேன்.
அ.தி.மு.க. கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொ டர்ந்து கெடுப்பதாக கூறுகிறார்கள். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற திட்டங்களை அறிவித்து இருந்தால் நாங்கள் தடுக்க மாட்டோம். தேர்தல் நேரத்தில் ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்ததை நாங்கள் எதிர்த்தோம். நாங்கள் செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம். வேட்பாளர் ஆ.ராசா நீலகிரி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதனால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் சி.ஆர்.ரவிச்சந்திரன், டி.ஆர். சண்முகசுந்தரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.