மங்களூரு,
மோசடி செய்த நகைக்கடை உரிமையாளருக்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு வங்கி மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்பத்துடன் தற்கொலை
உடுப்பி அருகே சிறுவா போலீஸ் எல்லைக்குட்பட்ட படுபெல்லி பகுதியை சேர்ந்தவர் சங்கரா ஆச்சாரி. நகைக்கடை உரிமையாளர். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 13-ந்தேதி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் சயனைடு தின்று தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சிறுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், குஞ்சரகிரி கூட்டுறவு வங்கி கிளையில் அவர், 93 கணக்குகள் தொடங்கி 3 கிலோ 300 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் வரை கடன் பெற்றது தெரியவந்தது. மேலும், அவர் அடகு வைத்த தங்க நகைகளில் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான 28 கிராம் மட்டும் தான் உண்மையான தங்கம் என்றும், மீதி அனைத்தும் போலியானவை என்றும் தெரியவந்துள்ளது.
போலீசில் புகார்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூட்டுறவு வங்கியின் முதன்மை செயல் அதிகாரி மனோகர் ராவ், வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மனோகர் ராவ், நகைக்கடை உரிமையாளர் சங்கரா ஆச்சாரிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். தான் மோசடி செய்தது தெரிந்தவுடன் சங்கரா ஆச்சாரி, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மேலும், மோசடியில் ஈடுபட்ட சங்கரா ஆச்சாரிக்கு, குஞ்சரகிரி வங்கி மேலாளர் உமேஷ் அமீன் (வயது 43), நகை மதிப்பீட்டாளர் உமேஷ் ஆச்சாரியா (49) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மனோகர் ராவ், சிறுவா போலீசில் புகார் கொடுத்தார்.
2 பேர் கைது
அதன்பேரில் சிறுவா போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து காபு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மூர்த்தி ராவ், சிறுவா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மரெட்டி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கூட்டுறவு வங்கியின் குஞ்சரகிரி கிளை மேலாளர் உமேஷ் அமீன், நகை மதிப்பீட்டாளர் உமேஷ் ஆச்சாரியா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.