மும்பை,
மராட்டியம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வடமாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மராட்டியம், கோவா, குஜராத், சத்தீஷ்கார், மணிப்பூர், மிசோரம், அரியானா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் பெய்த மழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 400 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் அந்தமான் பகுதிகளில் உள்ள மீனவர்கள் 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, பால்கர் பகுதிகளிலும் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சயான்-குர்லா இடையே தண்டவாளத்தில் வெள்ளம் தேங்கியதால் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
தானே மாவட்டத்தில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தானே பகுதியில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.