நெல்லை,
பாளையங்கோட்டை பெருமாள்புரம் வணிகவரித்துறை ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மகன் ஜெயின்சன் (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதில் ஜெயின்சன் 303 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
இவர் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் பாடத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அந்த படிப்பில் சேருவதற்கு போதுமான மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்து வந்தார். இருந்த போதிலும் பெற்றோர் ஜெயின்சனை சமாதானப்படுத்தி, வேறு படிப்புக்கு ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜெயின்சன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இரவில் பெற்றோருடன் படுத்திருந்த அவர் மற்றொரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஜெயின்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.