சிவகாசி,
மாணவர் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சின்னதம்பி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
இலவசமாக கொடுக்க வேண்டிய கல்வியும், மருத்துவ வசதியும் தமிழகத்தில் கட்டணமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியவர்கள் கல்வியையும், மருத்துவத்தையும் பெற பெரும் சிரமப்படவேண்டிய நிலை உள்ளது. இதை போக்க அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருவது ஆறுதலான செய்தி.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் தங்களிடம் படிக்கும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்த தேதியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் 20192020ம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை கட்டி விட வேண்டும் என்று அறிவிப்பு செய்தது. அதன்படி பொற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் குழந்தைகளுக்கு உரிய கல்வி கட்டணத்தை செலுத்தினர்.
பள்ளியின் சார்பில் தற்போது 1ம் வகுப்பு மாணவருக்கு ரூ.8 ஆயிரத்துக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அரசு எவ்வளவு தொகை வசூலிக்க உத்தவிட்டுள்ளது என்பதை அறியாத பெற்றோர்கள் தற்போது அதிகளவில் பணத்தை செலுத்தி வருகிறார்கள். இதில் பெரும் அளவில் மோசடி நடந்து இருப்பதாக தெரியவருகிறது.
எனவே அரசு நிர்ணயித்த தொகையை ஒவ்வொரு வகுப்பு வாரியாக பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் தான் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும். அதேபோல் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு படிக்க ஒதுக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது எத்தனை பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இந்த சலுகையின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் பெயர்களையும் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். பணம் கட்டி படிக்கும் பலரது பெயர்கள் அரசு சலுகையில் படிப்பதாக பல பள்ளிகள் போலி கணக்கு காட்டி வருகின்றன. எனவே பள்ளி திறப்பதற்குள் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாணவர் காங்கிரஸ் தனியார் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.