செய்திகள்

தெள்ளூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்ட ஒப்பந்ததாரர்

ஊசூர் அருகே உள்ள தெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஒப்பந்ததாரர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டம், ஊசூரை அடுத்த தெள்ளூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 62 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர் பூங்கொடி என்பவரும், 2 ஆசிரியர்களும் உள்ளனர்.

இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் பழைய கட்டிட மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேற்கூரை ஓடுகள் பழுதடைந்ததால் மழைக்காலத்தில் ஒழுகுவதுடன், சில சமயங்களில் உடைந்து கீழே விழும் அபாயத்தில் இருந்தது.

எனவே அந்த கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து எதிரே உள்ள பழைய பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து அதில் மாணவர்களை அமர வைக்க அரசு முடிவு செய்தது.

இதையடுத்து கட்டிடம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த ஏலமும் விடப்பட்டது. பள்ளி கட்டிடம் பழுதுபார்க்கும் பணியின் ஏலத்தை அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் எடுத்து, பழுதுபார்க்கும் பணி செய்து வந்தார்.

3 மாதத்தில் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, பள்ளி கட்டிடம் புதுப்பொலிவு பெற்றது. தொடர்ந்து அந்த கட்டிடத்தில் மாணவர்கள் அமரவைத்து, பாடம் கற்றுத்தரப்படுகிறது. பழுதுபார்க்கும் பணியை செய்த ஒப்பந்ததாரர் லட்சுமிக்கு இதுவரை, பணி செய்ததற்கான தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பணம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் லட்சுமி நேற்று காலை 8 மணியளவில் பள்ளியின் கதவுகளுக்கு பூட்டுப்போட்டு, சாவியை எடுத்துச் சென்றார். மாணவர்கள் வரத் தொடங்கியதை அடுத்து கதவுகள் பூட்டியிருந்ததால் மாணவர்கள் பள்ளி வராண்டாவிலே நீண்ட நேரம் காத்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும், கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனே வட்டார கல்வி அலுவலர் அபிபூர்ரகுமானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரரை போனில் தொடர்புகொண்டு பேசி சமரசம் செய்தனர்.

பின்னர் 12 மணியளவில் பள்ளியின் கதவுகள் திறக்கப்பட்டு மாணவர்கள் உள்ளே அமரவைத்து பாடம் நடத்தப்பட்டது.

பள்ளிக்கு பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்