10 கிலோ அரிசி
முன்னாள் முதல்-மந்திரி குண்டுராவ் பிறந்த நாளையொட்டி பெங்களூரு காந்திநகரில் உள்ள ஸ்ரீராமபுராவில் ஏழை மக்களுக்கு உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு, மக்களுக்கு உணவு தொகுப்புகளை வழங்கி பேசியதாவது:-
கர்நாடகத்தில் தற்போது உள்ள பா.ஜனதா ஏழை மக்களுக்கு 7 கிலோ இலவச அரிசி வழங்குவதை, தங்களின் சொந்த பணத்தில் வழங்குவது போல் பேசுகிறார்கள். கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அவ்வாறு காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். இந்த பா.ஜனதா அரசை வேரேடு பிடுங்கி எறிய வேண்டும்.
ஆட்சிக்கு வர முடியாது
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் மந்திரிசபையில் முஸ்லிம், கிறிஸ்துவ சமூகங்களை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை. பா.ஜனதா எப்போதும் பின்வாசல் வழியாக தான் ஆட்சிக்கு வருகிறது. அந்த கட்சியால் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. ஆபரேஷன் தாமரை செய்து பா.ஜனதாவை ஆட்சியில் அமர வைத்த எடியூரப்பாவை நீக்கிவிட்டனர். பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆகியுள்ளார். இவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகத்திரை தான். நாட்டின் சுதந்திரத்திற்காக அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட உயிர்த்தியாகம் செய்யவில்லை. இது தான் அவர்களின் தேசபக்தி. ஏழை மக்களுக்கு பயன்படும் இந்திரா உணவகத்தை இந்த அரசு மூடுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இந்திரா உணவகத்தை மீண்டும் திறப்போம். இலவச அரிசி திட்டத்தை நான் தொடங்கி வைத்தோன். ஏழை மக்களுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்கினோம். குமாரசாமி, அந்த திட்டத்திற்கு தான் நிதி ஒதுக்கீடு செய்ததாக பொய் சொல்கிறார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.