புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்று கூறுவது தவறு. ஏனெனில் தமிழக அரசு 69 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. இதை ஐகோர்ட்டும் உறுதி செய்திருக்கிறது. இதில் ஐகோர்ட்டின் ஒப்புதலுக்கு சுப்ரீம் கோர்ட்டும் தடை விதிக்கவில்லை என வாதிட்டார்.
நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் சுமார் 20 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கிறார்கள் என்று கூறிய வேணுகோபால், இத்தகைய பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஒருவராவது கேள்வி எழுப்பியிருக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.
எனவேதான் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த மக்களின் மேம்பாட்டுக்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதாகவும், ஏழைகளுக்கு அரசின் உதவியே தேவையன்றி, வசதியானவர்களின் உதவி தேவையில்லை என்றும் தெரிவித்தார்.