தேசிய செய்திகள்

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,396 சிறுவர்கள் தற்கொலை

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த ஆண்டில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 392 பேர் ஆண்கள், 6 ஆயிரத்து 4 பேர் பெண்கள். சராசரியாக நாள் ஒன்றுக்கு 31 பேர் வீதமும், ஒரு மணி நரத்துக்கு ஒருவர் வீதமும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, 2019-ம் ஆண்டுடன் (9,613 பேர்) ஒப்பிடுகையில் 18 சதவீதமும், 2018-ம் ஆண்டுடன் (9,413 பேர்) ஒப்பிடுகையில் 21 சதவீதமும் அதிகம்.

குடும்ப பிரச்சினைகளால் அதிகம்பேர், அதாவது 4 ஆயிரத்து 6 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதல் விவகாரத்தால் 1,337 பேரும், நோய் காரணமாக 1,327 பேரும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சித்தாந்த பிரச்சினைகள், கதாநாயக வழிபாடு, வேலையின்மை, திவால் நிலைமை, ஆண்மை குறைவு, போதை பழக்கம் ஆகியவை சிறுவர்கள் தற்கொலைக்கான இதர காரணங்கள் ஆகும். சிறுவர்களிடையே கொரோனாவால் ஏற்பட்ட மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் துணை இயக்குனர் பிரபாத் குமார் கூறியதாவது:-

கொரோனாவை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் சிறுவர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டியதாகி விட்டது. நண்பர்களை சந்திக்க முடியாமை, தனிமையில் இருத்தல், கொரோனாவுக்கு உறவினர்களை பறிகொடுத்தது, நோய் பீதி, குடும்ப வறுமை, ஆன்லைன் வகுப்புக்கான வசதி இல்லாமை போன்றவற்றால் சிறுவர்களுக்கு மன உளைச்சல் அதிகரித்து விட்டது.

இதை தவிர்க்க பள்ளிகள் மனநல ஆலோசனை வழங்க வேண்டும். பெற்றோர், பள்ளிகள், அண்டை வீட்டார், அரசு எல்லோருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. சிறுவர்கள் நல்ல சூழ்நிலையில் படித்து, தங்கள் கனவுகளை நனவாக்க வழி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்