பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தொழிலதிபர் ஒருவர் வந்துள்ளார். வில்சன் கார்டன் பகுதியை சேர்ந்த அபு அகீல் அசார் சாத் (வயது 52) என்பவர் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நண்பருடன் விமானத்தில் ஆமதாபாத் நகருக்கு செல்வதற்காக வந்து விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். அவருடைய உடமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் அபு விளையாட்டாக, பையின் உள்ளே 2 வெடிகுண்டுகள் உள்ளன என கூறியுள்ளார்.
இதனால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எச்சரிக்கையாக செயல்பட்டனர். அபு கைது செய்யப்பட்டு, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறரின் வாழ்வு அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
சி.ஐ.எஸ்.எப். போலீசார் எவ்வளவோ கூறியும், அவர் தொடர்ந்து வெடிகுண்டுகளை பற்றி கூறி, சக பயணிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.