பெங்களூரு :-
பெங்களூரு கோவிந்தராஜ்நகர் போலீஸ் குடியிருப்புகளுக்குள் புகுந்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் திருடப்படும் சம்பவம் அடிக்கடி நடந்தன. இதுகுறித்து கோவிந்தராஜ்நகர், ராஜாஜிநகர் பகுதிகளில் இருந்து புகார்கள் எழுந்தன. அந்த புகார்களின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் லோகேஷ் மற்றும் ஹேமந்த் என்பதும், அவர்கள் தான் சமையல் கியாஸ் சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 20 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் லோகேஷ் ஏற்கனவே குற்றவழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும் அவர் தனது நண்பர் ஹேமந்த் உதவியுடன் கியாஸ் சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.