தேசிய செய்திகள்

அமெரிக்கா உள்ளிட்ட 15 நாட்டு தூதர்கள் காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணம்; நிலவரத்தை நேரில் பார்வையிட்டனர்

அமெரிக்கா உள்ளிட்ட 15 நாட்டு தூதர்கள் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காஷ்மீர் சென்றனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை அவர்கள் நேரடியாக பார்வை யிட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் முன்னாள் முதல்-மந்திரிகள் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து நேரில் அறிய விரும்புவதாக பல்வேறு நாடுகளின் தூதர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை காஷ்மீருக்கு அழைத்து செல்ல மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ.ஜஸ்டர் உள்பட 15 நாடுகளின் தூதர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் அழைத்து செல்லப்பட்டனர். இந்த குழுவில் வங்காளதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவுகள், தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் இடம்பெற்றனர்.

இந்த குழுவினரை ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சிறப்பு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தூதர்கள் அனைவரும் அங்குள்ள ராணுவ கண்டோன்மென்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த குழுவினருடன் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப்பும் உடன் சென்றார்.

காஷ்மீரில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கினர். குறிப்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு வரும் அச்சுறுத்தல் மற்றும் காஷ்மீரின் பாதுகாப்பு சூழல்கள் குறித்து அவர்கள் எடுத்துக்கூறினர்.

பின்னர் இந்த குழுவினர் காஷ்மீரை சேர்ந்த உள்ளூர் அரசியல் தலைவர்கள், உள்ளூர் ஊடக பிரதிநிதிகள் குழுக்களையும் சந்தித்து பேசினர். இதில் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் அங்கு நிலவும் சூழல் குறித்து உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகத்தினர் எடுத்துரைத்தனர். இந்த சந்திப்புகளுக்கு இடையே உள்ளூர் பிரதிநிதிகளையும் தூதர் கள் சந்தித்தனர். அங்குள்ள நிலவரத்தை கேட்டு அறிந்தனர்.

மேலும் பல்வேறு தரப்பினரை சந்தித்துவிட்டு ஜம்மு சென்ற வெளிநாட்டு தூதர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த பயணத்தின் 2-வது நாளான இன்று அவர்கள் மேலும் சில பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சூழ்நிலைகளை பார்வையிட்டு, பின்னர் டெல்லி திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

வெளிநாட்டு தூதர்களின் இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்ததற்காக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. காஷ்மீரின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்கு வெளிநாட்டு தூதர்களை அனுமதிக்கும் மத்திய அரசு, உள்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

காஷ்மீரில் சுமுகமான நிலை நிலவியிருந்தால், அங்குள்ள அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்? என வெளிநாட்டு தூதர்களை கேட்க விரும்புவதாக தேசிய மாநாடு கட்சி கூறியுள்ளது. இதைப்போல மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் வெளிநாட்டு தூதர்களின் பயணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு