புதுடெல்லி,
கொரோனா நிவாரணங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரதமர் பராமரிப்பு நிதியை (பி.எம்.கேர்ஸ்) தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரி தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த மாதம் 17-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரதமர் பராமரிப்பு நிதி என்பது தன்னார்வ நிதி. தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.
அப்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, பி.எம்.கேர்ஸ் நிதி என்று தனியாக நிதியை உருவாக்குவது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளுக்கு முரணானது. தேசிய பேரிடர் நிவாரண நிதி அரசின் தலைமை தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால் பி.எம்.கேர்ஸ் நிதி தனியார் தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்படுவதாக அரசே கூறியிருக்கிறது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.