மும்பை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்த ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மாநில அரசு பணிகளில் நேரடி ஆள் சேர்ப்புக்கான எந்த விளம்பரத்தையும் வெளியிடவில்லை. இதனால் கடந்த ஆண்டு அரசு பணிக்கு விண்ணப்பிக்க இருந்த பலர் வயது உச்சவரம்பை கடந்துவிட்டதால் இந்த ஆண்டு தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒருமுறை வயது வரம்பில் தளர்வு செய்து மாநில அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 2020-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதிக்கு இடையில் அரசு பணி ஆள் சேர்ப்புக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்க வயது வரம்பை தாண்டிய விண்ணப்பதாரர்கள், டிசம்பர் 2022-ம் ஆண்டு 31-ந் தேதி வரை அரசால் வெளியிடப்படும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.