மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.
மந்திரி சபை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 24ந்தேதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை திடீரென சந்தித்து பேசினார்.
அவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். இதன்பின் வருகிற 30ந்தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.
அஜித் பவார் ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.
இந்நிலையில், மராட்டிய மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் அஜித் பவார் துணை முதல் மந்திரியாக மீண்டும் பதவி ஏற்று கொண்டார். அவரை தொடர்ந்து 36 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொள்கின்றனர்.