புதுடெல்லி
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் சட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை இந்த சபையில் நான் மீண்டும் படிக்க விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் தொடர்பாக தற்போது யு-டர்ன் செய்திருப்பவர்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
கடந்த 1930-களில் அமைக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் முறையால், நமது விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை அதிகமான லாபத்துக்கு விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.
அனைத்து விதமான தடைகளையும் நீக்குவதே எங்களுடைய நோக்கம். பரந்த அடிப்படையிலான பொதுவான ஓர் சந்தையை இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்ய ஒரு சந்தை மட்டும் இருக்க வேண்டும் என்பதில் மன்மோகன் சிங் தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறிவிட்டார். மன்மோகன் சிங் என்ன கூறினாரோ அதை மோடி இன்று செய்துவிட்டதை நினைத்து நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். எனக் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரையில் எந்தப் பொருளும் இல்லை. மூன்று வேளாண் சட்டங்களில் இல்லாதது குறித்த காங்கிரஸின் முன்மொழிவை அவர் கவனிக்கவில்லை, காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாயச் சட்டங்களை கொண்டு வந்தார்.
விவசாயிகள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் என யாருடைய கவலையை பற்றியும் அவர் கேட்பதாக இல்லை. யாருக்கும் எதுவும் தெரியாது என எண்ணுகிறார்கள். நாம் அனைவரும் முட்டாள்களா? எனக் கூறியுள்ளார்.