தேசிய செய்திகள்

காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு ரத்து: 2-வது நாளாக கட்டுப்பாடுகள் தொடர்கிறது; அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன

காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து 2-வது நாளாக ஜம்முவில் கட்டுப்பாடுகள் தொடர்கிறது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, கதுவா, சம்பா, பூஞ்ச், தோடா, ரஜோரி, உதம்பூர் போன்ற மாவட்டங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் 2-வது நாளாக மூடப்பட்டன. அடுத்த உத்தரவு வரும்வரை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பல்வேறு பள்ளிகள் மற்றும் ஜம்மு பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 40 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் ராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். செல்போன் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சில தொலைபேசி மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு கவர்னர் மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

டி.ஜி.பி. தில்பாக்சிங் கூறும்போது, மாநிலத்தின் எந்த பகுதியிலும் இதுவரை அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளால் சட்டம்-ஒழுங்கு நிலைமை முழு அமைதியுடன் இருக்கிறது. அவசர வேலைகளுக்காக வெளியில் செல்லும் மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டார்கள் என்றார்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் வரும் என்பதற்காகவே உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்பட சுமார் 12 தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு