புனே,
மராட்டியத்தில் முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களில் ஒருவரான அஜித் பவார், 2 துணை முதல்-மந்திரிகளில் ஒருவராக பதவி வகித்தார். இந்நிலையில், மராட்டியத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதற்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக அவர் சிறிய ரக சார்ட்டர்டு விமானத்தில் நேற்று காலை புறப்பட்டு சென்றார்.
அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர். இந்த நிலையில், விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் காலை 8.48 மணியளவில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது.
இதில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி, அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரும் பலியானார்கள். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக அவர், பாதுகாப்பு அதிகாரியுடன் விமானத்தில் அமர்ந்து இருக்கும் கடைசியாக எடுக்கப்பட்ட, அரிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
அஜித் பவார், மூத்த அரசியல்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) நிறுவனரான சரத் பவாரின் மருமகன் ஆவார். மக்களவை எம்.பி. சுப்ரியா சுலேவின் உறவினரும் ஆவார். அவருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய் பவார் மற்றும் பார்த் பவார் என 2 மகன்களும் உள்ளனர்.
அஜித் பவார், தன்னுடைய மாமாவான சரத் பவாருடன் இணைந்து 1991-ம் ஆண்டில் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1991-ம் ஆண்டில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வான பின்னர் 1995, 1999, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை படைத்திருக்கிறார். மொத்தம் 7 முறை அஜித் பவார் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். மராட்டிய அரசியலில் சக்தி வாய்ந்த நபராக அறியப்பட்ட அவருடைய மறைவால், அவருடைய அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.