புதுடெல்லி,
இந்தியாவுக்கு நாளை (திங்கட்கிழமை) வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரது இந்த பயணத்தை வெறும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பாக பயன்படுத்தாமல், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கூறியிருந்தது. டிரம்ப் பங்கேற்கும் ஆமதாபாத் நிகழ்ச்சியை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக மாற்றக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
காங்கிரசின் இந்த விமர்சனத்துக்கு பா.ஜனதா நேற்று பதிலளித்து உள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, டிரம்பின் வருகை மூலம் இந்தியாவின் அந்தஸ்து உயர்வதைப்பார்த்து காங்கிரஸ் ஏன் எரிச்சல் கொள்கிறது? உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயகத்துக்கு இடையே நடைபெறும் இந்த சந்திப்பு கொண்டாடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மோடி-டிரம்ப் சந்திப்பு ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று கூறிய சம்பித் பத்ரா, கட்சிகள் அனைத்தும் தங்கள் அரசியல் அடையாளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே தேசம் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.