புதுடெல்லி,
கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 17 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி, ஆ.ராசா, கனிமொழி உள்பட 17 பேரையும் விடுதலை செய்து அப்போதைய நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அதற்கு மறுநாள், சி.பி.ஐ. சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள், டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. சி.பி.ஐ. தனது வாதத்தை தொடங்கியது.
சி.பி.ஐ. வாதத்தை கேட்ட நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.