கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உடல் எடையை குறைப்பதற்கான 3 மருந்துகளுக்கு ஒப்புதல் - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எடை குறைப்பு சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

எடை குறைப்பு மருந்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி அனுப்பிரியா படேல் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் உச்சபட்ச மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எடை குறைப்பு சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஓர்லிஸ்டாட், டிர்செபடைடு மற்றும் செமாக்ளூடைடு மருந்துகள் சில்லறை மருந்து கடைகளில் விற்கப்படும். அனைத்து மருந்துகளும், மருத்துவரின் பரிந்துரையின்படியும், மருத்துவ மேற்பார்வையின் கீழும் பயன்படுத்தப்பட வேண்டும்.

எடையை குறைக்கவோ அல்லது வளர்சிதை மாற்ற விகிதத்தை மாற்றுவதாகவோ கூறும் மருந்துகள், மருத்துவ பரிசோதனை விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகள் மீறப்பட்டால் மாநில உரிமம் வழங்கும் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடிய மருந்துகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், அவற்றை முறையற்ற வகையில் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also read:கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணையில் முறையான பதிலை வழங்கியிருக்கிறேன் - செந்தில் பாலாஜி பேட்டி