புதுடெல்லி,
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு 3 திருத்த சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என அரசு உறுதியளித்தது.
ஆனால் இந்த சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். விவசாயத்தை அழித்து வேளாண் துறையை கார்பரேட் வசமாக்கும் எனவும் சந்தேகம் வெளியிட்டு வரும் அவர்கள், இந்த சட்டங்களை அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.
ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்காததால் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நடத்திய பாரத் பந்த் காரணமாக வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த பந்த் குறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் கூறியதாவது:-
நாங்கள் நடத்திய பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நாடுமுழுவதும் எங்களுக்கு விவசாயிகளின் முழு ஆதரவு இருந்தது. மக்கள் நடமாட்டத்தை எளிதாக்க வேண்டியிருப்பதால் எல்லாவற்றையும் மூடி வைக்க முடியாது. அதனால் சில விலக்கு அளித்து இருந்தோம். இதன் காரணமாக சில மாநிலங்களில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. நாங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாரில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.