பிஜாப்பூர்,
சத்தீஷ்காரின் கான்கர்-நாராயணபூர் எல்லை பகுதியில், சோட்டேபெத்தியா பகுதிக்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மாவட்ட ரிசர்வ் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், பட்டாசுகள், மின்சார வயர்கள் மற்றும் பிற நக்சலைட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அனைத்தும் செயலிழக்கம் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
கோத்ரி ஆற்றின் அருகே நடந்த இந்த சோதனையில் 3 சக்தி வாய்ந்த பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், பாதுகாப்பு படையினரை தாக்கும் நோக்கத்துடன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்து, அவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதுதொடர்பான முதல்கட்ட விசாரணையில், பெரிய அளவில் தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.
சத்தீஷ்காரில் பிஜாப்பூரில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் 2 நக்சலைட்டுகளை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதுபற்றி பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறும்போது, கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி, 9 மி.மீ. ரக பிஸ்டல் ஒன்று மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்றார்.